தினமலர் 12.02.2010
நெல்லை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பயிற்சி பூச்சியியல் வல்லுநர் அறிவுரை
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சிப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று நடந்தது.மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கலு.சிவலிங்கம் தலைமை வகித்தார். தச்சை மண்டல உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் ஓய்வுபெற்ற பூச்சியியல் துறை வல்லுநர் கந்தசாமி, கொசு ஒழிப்பு முறைகள் குறித்து பேசுகையில், “கொசு உற்பத்தியை தடுக்க வீட்டிற்குள் வேண்டாத பிளாஸ்டிக் டப்பாக்கள், தேய்ந்துபோன டயர்கள், உடைந்த மண்சட்டி, பானைகள், ஆட்டு உரலை அகற்றவேண்டும். மூடப்படாத சிமென்ட் தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்த் தொட்டிகளை மூடி வைக்கவேண்டும்.
வாரம் ஒரு முறை சிமென்ட் தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு நன்கு காய வைத்த பின் உபயோகிப்பதால் கொசு உற்பத்தியை வெகுவாக குறைக்கலாம். கொசு மருந்து தெளிப்பது மூலமும் கொசுவின் உற்பத்தியை குறைக்க இயலும். மாநகராட்சி பணியாளர்கள் மருந்து தெளிக்க வரும்போது, அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுத்து தெளிக்கவேண்டும்.
காலை, மாலை நேரங்களில் புகை மருந்து அடிக்க வரும்போது வீட்டிலுள்ள ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை திறந்து வைத்திருக்கவேண்டும். வீட்டின் உள்ளே கொசுக்கள் அழிவதற்கு இது உதவியாக இருக்கும். காய்ச்சல் இருப்பின் ஆஸ்பத்திரிகளிலோ, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலோ காட்டி உரிய சிகிச்சை பெறவேண்டும் என்றார்‘.கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், ஏ.ஆர்.சங்கரலிங்கம், சாகுல்ஹமீது, சுப்பிரமணியன், முருகேசன், கலியனாண்டி, முருகன் மற்றும் சுகாதார பார்வையாளர்கள், துர்புரவுப்பணி மேற்பார்வையளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.