தினத்தந்தி 23.08.2013
நெல்லை மாநகராட்சி கூட்டம்
நெல்லை மாநகராட்சி கூட்டம் ராஜாஜி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மேயர்
விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன்,
ஆணையாளர் த.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் பகல் 11 மணிக்கு
தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பகல் 11-45 மணிக்கு தான்
தொடங்கியது. கூட்டம் சரியான நேரத்தில் தொடங்கவில்லை என்று தி.மு.க.
கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் விஜிலா சத்யானந்த், பேசுகையில், 67-வது
சுதந்திர தின விழாவில் சென்னை கோட்டையில் கொடியேற்றிய முதல்-அமைச்சர்
ஜெயலலிதா, தமிழக மக்களே என் குடும்பம், தமிழக மக்களே என் பிள்ளைகள், தமிழக
மக்களின் நலனே என் நலன் என்று பேசிவிட்டு ராணுவ வீரர்களின் நினைவிடத்தில்
வீரவணக்கம் செலுத்தினார். மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பென்சன்
தொகையை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நன்றி
தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மதம்
மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று
பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது, என்றார்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி பகுதிக்கு அரியநாயகிபுரம்
அணைக்கட்டில் இருந்து ரூ.230 கோடி மதிப்பில் குடிநீர் கொண்டு வருவதற்கான
திட்டத்தின் முழுவிளக்கத்தை செயற்பொறியாளர் நாராயண நாயர், வீடியோ
படக்காட்சி மூலம் விளக்கி கூறினார்.
புதிய குடிநீர் திட்டம்
மேயர் விஜிலா சத்யானந்த் பேசியதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதிக்கு தற்போது 50.10 எம்.எல்.டி. குடிநீர்
கிடைத்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய குடிநீர்
திட்டம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த தி.மு.க. ஆட்சியில்
பாபநாசம் அணையில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டத்தை
அறிவித்தனர். நாங்கள் பொறுப்புக்கு வந்ததும் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு
செய்தோம். அதில் 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு புலிகள் சரணாலத்தின் வழியாக
பைப் லைன் அமைக்கவேண்டி உள்ளது.
இது சாத்தியமில்லாதது என்பதால் அந்த திட்டத்தை மாற்றி, அரியநாயகிபுரம்
அணைகட்டில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்து திட்ட அறிக்கை தயார்
செய்யப்பட்டது இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, உத்தரவிட்டு உள்ளார்.
ரூ.230 கோடி
இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு மேலும் 50
எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். இதற்கான மொத்த மதிப்பீடு ரூ.230
கோடியாகும். இதில் ரூ.92 கோடியை தமிழக முதல்-அமைச்சர் வழங்குகிறார். ரூ.69
கோடி ஜெர்மன் வங்கியில் கடனாக வாங்கப்படுகிறது. ரூ.46 கோடி மானியமாக
வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.23 கோடி மட்டும் மாநகராட்சி பங்களிப்பாக
செலுத்த வேண்டி உள்ளது.
அரியநாயகிபுரம் அணைக்கட்டில் இருந்து எடுக்கப்படுகின்ற தண்ணீர்
சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து மாநகராட்சி மக்களுக்கு
வழங்கப்படும். இதனால் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ.11 கோடி ஆகிறது. எனவே
வீட்டு குடிநீர் கட்டணம் ரூ.200 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டம்
நடைமுறைக்கு வருகின்றபோது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி 24 மணி நேரமும்
குடி தண்ணீர் கிடைக்கும். திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது தான் குடிநீர்
கட்டண உயர்வும் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு மேயர் விஜிலா சத்யானந்த் கூறினார்.