தினகரன் 19.08.2010
நெல்லை மாநகராட்சி திட்டம் வீடுகள் தோறும் மரக்கன்று வளர்ப்பு இன்றைய கூட்டத்தில் விவாதம்
நெல்லை, ஆக. 19:நெல்லை மாநகராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வண்ணார்பேட்டை தெற்கு, வடக்கு புறவழிச்சாலை, குறிச்சி, கொக்கிரகுளம், கோடீஸ்வரன் நகர், கேடிசி நகர் ஆகிய பகுதிகளில் புதிது புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.
குடியிருப்புகள் உருவாக்குவதற்காக விவசாய நிலங்கள், பசுமை நிறைந்த மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி வருகின்றன. எனினும் மரங்கள், பசுமை சூழ்ந¢த இடங்கள் அழிக்கப்படுவதால் நாளுக்கு நாள் உஷ்ணம் அதிகரித்து வருகிறது.
எனவே நெல்லை மாநகராட்சியில் பசுமையை காக்க மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டமிட்டுள்ளது. அதன்படி நெல்லை மாநகராட்சியில் புதிதாக உருவாகப்படும் மனைப் பிரிவிற்கு ஒரு மனைக்கு 2 மரக்கன்றுகள் வீதமும், பொது இடங்களில் 15 அடி இடைவெளியில் ஒரு மரக்கன்றும் நட்டு வேலி அமைக்க வேண்டும். மூன்று மாதங்கள் இந்த மரக்கன்றுகளை அந்த மனைப்பிரிவின் உரிமையாளர் பாதுகாக்க வேண்டும்.
அதன் பின்னர் மாநகராட்சி மூலம் மரக்கன்றுகளை பாதுகாக்க 50 மரக்கன்றுகளுக்கு ஒராண்டு பராமரிப்பு செலவாக ரூ.35 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த மரக்கன்றுகளை சொட்டு நீர் பாசனம் மூலமும், சுய உதவிக்குழுக்கள் மூலமும் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கும்.இதேபோல 1500 சதுர அடிக்கும் மேல் கோரப்படும் கட்டிட அனுமதிக்கு பசுமை நிதியாக ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சி பகுதியில் இரண்டு மரக்கன்றுகளை மாநகராட்சி நிர்வாகமே நட்டு பராமரிக்கும்.தமிழகத்தில் நெல்லை மாநகராட்சியில் முதன் முதலாக இந்த பசுமை திட்டத்தை செயல்படுத்த நெல்லை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாநகராட்சியில் இன்று நடக்கும் அவசர கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.