தினமணி 29.04.2010
நெல்லை மாநகராட்சி வாகன காப்பகத்தில் ஸ்மார்ட் கார்டு
திருநெல்வேலி, ஏப். 28: தமிழக மாநகராட்சிகளிலேயே முதன் முதலாக திருநெல்வேலியில் வாகன காப்பகத்தில் “ஸ்மார்ட் கார்டு‘ வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.
முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ள இந்த வாகன காப்பகத்தில் எவ்வித முறைகேடுகள் செய்யவோ, வருமான இழப்பு ஏற்படவோ வாய்ப்பு இல்லை என்றும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ. 40 லட்சம் வருமானம் கிடைக்கும் என்றும் மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் உள்ள வாகன காப்பகத்தை தனியார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். அந்த மூன்றாண்டு குத்தகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த இருந்த நிலையில் அதை மீண்டும் குத்தகைக்குவிட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது.
கடந்த முறை ரூ. 25.5 லட்சத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த முறை ரூ. 17 லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதால் அதை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துவிட்டு வாகன காப்பகத்தை தானே நடத்த முடிவு செய்தது. அதன்படி, கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகமே நடத்தி வருகிறது.
வாகன காப்பகத்தை மாநகராட்சி நிர்வாகம் நிர்வகிக்க தொடங்கிய உடன் முறைகேடுகளை தடுக்கவும், வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்கவும் கணினிமயமாக்கப்பட்டது. அதை மேலும் நவீனமாக்கும் வகையில் தற்போது ரூ. 4.5 லட்சம் செலவில் “ஸ்மார்ட் கார்டு‘ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த “ஸ்மார்ட் கார்டு‘ திட்டத்தை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன் செயல்விளக்கத்தை அந்நிறுவன தொழில்நுட்ப பிரிவு தலைவர் டி. முத்துக்குமரன் புதன்கிழமை விளக்கினார். இதில், மேயர் அ.லெ. சுப்பிரமணியன், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன் (பாளைங்கோட்டை), எஸ்.எஸ். மைதீன் (மேலப்பாளையம்), பூ. சுப்பிரமணின் (தச்சநல்லூர்), மாமன்ற உறுப்பினர் ஆ. துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஆணையர் கா. பாஸ்கரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வாகன காப்பகத்தைப் பயன்படுத்துவோருக்கு சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களில் “ஸ்மார்ட் கார்டு‘ வழங்கப்படும். வாகன காப்பகத்தை மாதம் முழுவதும் பயன்படுத்த விரும்புவோர், சிவப்பு அட்டையும், ஒரு நாள் பயன்படுத்துவோருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்படும். மாதாந்திர அட்டைக்கு இரு சக்கர வாகனத்திற்கு ரூ. 90 வாகன காப்பக கட்டணமாகவும், அட்டைக்குரிய வைப்புத் தொகையாக (திருப்பப் பெறக் கூடியது) ரூ. 50 என மொத்தம் ரூ. 140 வசூலிக்கப்படும். ஒரு நாள் பயன்பாட்டுக்கு 24 மணி நேர கட்டணமாக ரூ. 3 வசூலிக்கப்படும். அட்டையை தவறவிட்டால் அபராதத் தொகையாக ரூ. 50 செலுத்த வேண்டும். ஆட்டோவுக்கு ஒரு நாள் கட்டணமாக ரூ. 5-ம், காருக்கு ரூ. 10-ம் வசூலிக்கப்படும். மாதாந்திர கட்டணம் 30 நாள்களுக்கு சேர்த்து வசூலிக்கப்படும்.
ஒரு நாள் பயன்பாட்டுக்காக வாகன காப்பகத்திற்குள் வரும் வாகனங்களுக்கு அளிக்கப்படும் மஞ்சள் அட்டையை அங்குள்ள இயந்திரத்தில் காட்டிவிட்டு வாகனத்தின் பதிவு எண்ணை இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் அட்டையை பெற்றுக் கொண்டு சென்று விடலாம். வாகனத்தை திரும்ப எடுக்க வரும்போது அட்டையை இயந்திரத்தின் அருகில் காட்டிவிட்டு, அட்டையை ஒப்படைத்த பின்னர் பதிவு சரிபார்க்கப்பட்டு வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.
மாதாந்திர பயன்பாட்டுக்கான அட்டையை இயந்திரத்தின் அருகில் காட்டிவிட்டு (ஏற்கெனவே வாகன பதிவு எண் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால்) வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விடலாம்.
குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் வாகனம் நிறுத்தப்பட்டு பின்னர் எடுக்கப்பட்டால் அட்டையை இயந்திரத்தில் காட்டிய உடன் கூடுதல் கால அளவிற்கான கட்டணத்திற்கு ரசீது வரும். கட்டணத்தை செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நாள்களாக எடுத்துச் செல்லப்படாத வாகனங்கள் குறித்த விவரங்களை கணனி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அபராதம் விதிப்பு: புதிய பஸ்நிலையத்தில் அனுமதிக்கப்படாத இடத்தில் வாகனங்களை நிறுத்தினால், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 50, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 75, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 100 என அபராதத் தொகை வசூலிக்கப்படும். இந்த “ஸ்மார்ட் கார்டு‘ திட்டத்தை மேயர் வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறார் என்றார் ஆணையர்.