தினமலர் 11.01.2010
நொய்யலில் பனியன் கழிவுகளை கொட்டிய வாகனங்கள் பறிமுதல் : மாநகராட்சி நடவடிக்கை
திருப்பூர் : நொய்யல் ஆற்றில் பனியன் கழிவை கொட்டிய வாகனங்களை, மாநகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்துள்ளது. சம்பந் தப்பட்ட பனியன் நிறுவன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் பகுதியில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுவனங்களில், தொழிற் சாலை மற்றும் பனியன் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவது இல்லை. நீர் நிலைகள், ஓடை, நொய்யல் ஆற்றங்கரை, ரோட்டோரங்களில் கொட் டப்பட்டு மாசு ஏற்படுத்தப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இக்கழிவுகள், இரவு நேரங்களில் கொட்டப்படுவதால், மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்காமல் “கோட்டை‘ விட்டுவிடுகின்றன.
சமீபத்தில், வீரபாண்டி அருகே ஓடையில் கழிவுகளை கொட்டிய வேன் குறித்து, “தினமலர்‘ நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, தெற்கு ஆர்.டி.ஓ., பாட்டப்பசாமி சம்பந்தப்பட்ட மினி டெம்போவை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரோட்டரி மின்மயானம் அருகே நொய்யல் ஆற்றில் ஒரு மினி டெம்போ (டி.என். 39 ஏஆர் 1782) மற்றும் டூ–வீலரில் இருந்து பனியன் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டன.
அவ்வழியாக சென்ற மேயர் செல்வராஜ், உடனடியாக அவ்விரு வாகனங்களையும் பறிமுதல் செய்ய, மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டு, டவுன்ஹால் அரங்கிற்கு அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசாரணையில், காங்கயம் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் இருந்து அக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது தெரியவந்தது. தொடர்புடைய நிறுவனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவை, தொடர் நடவடிக்கை: ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்கள் திருப் பூர் நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல் பட்டு வருகின்றனர். ஆனால், கழிவுகளை அகற்ற போதுமான வசதிகள் செய்து தரப்பட வில்லை. தொழில் அமைப்புகள் சார்பிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட வில்லை. இதனால், ரோட்டோரத்திலும், நீர்நிலைகளிலும் கழிவுகள் கொட்டுவது தொடர்கிறது. மாநகராட்சி நிர்வாகம், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து, ஒவ்வொரு பனியன் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் முறையாக வெளியேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண் டும். முறையாக அப்புறப்படுத்தப்படுவதை, பனியன் நிறுவனங்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உறுதியளிக்க வேண் டும். மாநகராட்சி நிர்வாகமே, ஒட்டுமொத்த கழிவுகளையும் கொட்ட, குறிப் பிட்ட இடத்தை ஏற்பாடு செய்ய வேண் டும். பாறைக்குழிகளில் இக்கழிவை கொட்டி, தேவையான மருந்து தெளித்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக குறைந்த அளவு கட்டணம் பனியன் நிறுவனங்களிடம் வசூலிக்கலாம்.
அதிகபட்ச முன்னெச்சரிக்கை, பாதுகாப்புடன், நோய் தடுப்பு மருந்து, ஈ தொல்லை போன்றவற்றுக்கு மருந்து தெளிப்பதன் மூலம், பெரிய அளவில் உள்ள பாறைக்குழிகளையும் மூட முடியும்; பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி மக்களையும் சமாதானம் செய்ய முடியும். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.