பக்கிங்ஹாம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணி முடிக்க அவகாசம்
சென்னை:பக்கிங்ஹாம் கால்வாய் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க, ஜூன் மாதம் வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.மழைக்காலங்களில், சென்னை நகரம் வெள்ளத்தில் மிதப்பதை தடுக்கும் வகையில், ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், 1,447 கோடி ரூபாயில், தேவையான இடங்களில், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிகள் ஆகியவை, 2010ம் ஆண்டின் மத்தியில் துவங்கப்பட்டன.பொதுப்பணி துறை, 633 கோடி ரூபாயிலும், மாநகராட்சி, 814 கோடி ரூபாயிலும், இந்த பணிகளை மேற்கொண்டன.
இப்பணிகள், 2012ம் ஆண்டு, மத்தியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், பருவ மழைக்காலம் ஆகியவற்றால், குறித்த காலத்தில் முடிக்க முடியவில்லை என, ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.இதையேற்று, ஆறு மாத அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, 2012ம் ஆண்டு இறுதியில், பணிகள் முடித்திருக்க வேண்டும். மத்திய பக்கிங்ஹாம் கால்வாய், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில், இதுவரை, 40 சதவீதம் கூட முடியவில்லை.இந்நிலையில், மழைநீர் கால்வாய் பணிகளை, இப்பகுதிகளில் முடிக்க, ஜூன் மாதம் வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் துவங்கும் என்பதால், அதற்குள், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.