பச்சை மையை யார் பயன்படுத்தலாம்?
கோவை:பச்சை மையில் கையெழுத்திட தகுதியானவர்கள் யார்? மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் பச்சை மையை பயன்படுத்தலாமா? என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், வக்கீல் கேட்ட கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, அதிகாரிகள் பெறும் ஊதியத்தை தெரிவித்துள்ளார்.கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சுரேஷ்; வக்கீலான இவர் கோவையில் பணியாற்றுகிறார். மாநகராட்சியில் மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை அனைவருமே பச்சை மையினால் கையெழுத்திடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பச்சை மையில் கையெழுத்திட தகுதிகளாக எவை இருக்க வேண்டும் என்பதை அறிய முற்பட்டார். இதற்காக, கடந்த 2012ம் ஆண்டு, ஜன.,13ம் தேதி தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் உரிய பதில் கேட்டு, கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு(பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் அனுப்பினார்.கடிதத்தில், மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகளில் யாரெல்லாம் பச்சை மையினால் கையொப்பம் இடலாம்? அவர்களின் பதவியுடன் வகைப்படுத்தவும்.
மேயர், துணைமேயர், மண்டல தலைவர்கள், குழுத்தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் பச்சை மையினால் கையெழுத்து போடலாமா?பதவியுடன் தெரியப்படுத்த வேண்டும். அப்படி கையழுத்திட தகுதி பெற்றவர், பெறாதவர் என்றால் இதன் சட்ட விதிகள் என்ன? இதற்கான நகல்கள் தர வேண்டும்.மேற்காணும் சட்டவிதிகள் இல்லாதபோது கையெழுத்திடும் நபர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள், மனுவில் கேட்கப்பட்டிருந்தன.
ஆனால், மாநகராட்சி பொதுதகவல் அலுவலர் மற்றும் உதவிஆணையாளர்(நிர்வாகம்) துரைராஜ் தெரிவித்த பதிலில்,”” 9300 -34 ஆயிரத்து 800 + தர ஊதியம் 4,800 ரூபாய் என்ற ஊதிய ஏற்ற முறையில் ஊதியம் பெறும் அலுவலர்கள் மற்றும் 4,800 ரூபாய்க்கு அதிகமாக தர ஊதியம் பெறும் அனைத்து அலுவலர்களும், பச்சை மையில் கையெழுத்திடலாம்” என, தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதில் வேடிக்கை என்னவென்றால் தகவல் உரிமை அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வியான மேயர், குழுதலைவர்கள், கவுன்சிலர்கள் பச்சை மையில் கையெழுத்து போடுவது குறித்துதான். ஆனால், உதவி ஆணையாளர் பதிலில், அதிகாரிகள் வாங்கும் ஊதியம் தரப்பட்டுள்ளது. மீண்டும் கேட்டபோது, அரசிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டுகாலம் ஆகியும் இதுவரை பதில் இல்லை.கேள்வி கேட்கும் வக்கீலுக்கே பதில் தர ஒரு ஆண்டுகாலம் எடுத்துக் கொள்ளும் மாநகராட்சி நிர்வாகம், சாதாரண மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தருமா என்பது சந்தேகம் தான்.