பட்ஜெட்: மாநகர மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்…
மாநகராட்சியின் வருவாயை உயர்த்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளாமல் இருப்பதால் திருச்சி மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக கடந்த 4 ஆண்டுகளை குறிப்பிடலாம். இனி வரும் காலங்களிலாவது வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்டு வரவு செலவு பற்றாக்குறை
2010-11 ரூ.213.61 கோடி ரூ. 235.61 கோடி ரூ. 21.49 கோடி
2011-12 ரூ.210.15 கோடி ரூ.228.24 கோடி ரூ. 18.09 கோடி
2012-13 ரூ.276.04 கோடி ரூ.287.46 கோடி ரூ. 11.42 கோடி
2013-14 ரூ.260.38 கோடி ரூ.278.74 கோடி ரூ. 18.36 கோடி
திருச்சி மாநகராட்சியின் எல்கை விரிவடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் மாநகரின் வளர்ச்சி மற்றும் வருவாய் அதிகரிக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த அம்சங்கள் இடம்பெறாத இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது. முந்தைய பட்ஜெட்களில் அறிவித்து கிடப்பில் போடப்பட்டுள்ள பல திட்டங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டிலாவது அவற்றை செயல்படுத்தினால்தான் மக்களுக்கு ஆறுதலாக அமையும் என மாநகர ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.