தினமலர் 20.09.2010
பட்டியல் கிடைத்தவுடன் பன்றிக் காய்ச்சலுக்கு இலவச தடுப்பூசி: மேயர் உறுதி
அரும்பாக்கம்:””வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களின் பட்டியல் கிடைத்தவுடன் அவர்களுக்கு இலவச தடுப்பூசி போடப்படும்‘ என, சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி முகாம், நேற்று வள்ளுவர் கோட்டம் எதிரேயுள்ள பகுப்பாய்வு கூடத்தில் துவங்கியது.சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து கூறியதாவது:தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான அரசின் மூலம் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக பன்றிக் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது.
அங்கு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வு கூடத்தில் தடுப்பூசி முகாமை துவக்கியுள்ளோம்.இங்கு மூக்கு தெளிப்பான் தடுப்பு மருந்துக்கு 150 ரூபாயும், தடுப்பூசிக்கு 250 ரூபாய் எனவும் பெறப்படுகிறது.ஈ.வெ.ரா., சாலை, சூளைமேடு செல்லப்ப முதலி தெரு, சைதாப்பேட்டை, திருவான்மியூர் காமராஜர் அவென்யூ, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரேயுள்ள பகுப்பாய்வு கூடங்களில் நாளை முதல் தடுப்பூசி முகாம் துவங்கவுள்ளது.பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு லட்சம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாகதடுப்பூசி போடுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதற்கான பட்டியல் வந்தபின் செயல்படுத்தப்படும்.தற்போது போடப்படும் தடுப்பூசி மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சுகாதாரத் துறை அதிகாரி குகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற இம்முகாமில், 500க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வாசலோடு திரும்பிய சோகம்: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசுத் துறையான மாநகராட்சியிலும் இலவசமாக தடுப்பூசி போடுவார்கள் என்ற நம்பிக்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பலர் பகுப்பாய்வு கூடத்திற்கு நேற்று சென்றனர்.அங்கு பணம் செலுத்த வேண்டும் என்றவுடன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.