தினமலர் 14.09.2010
பணி நியமன ஆணை: ஸ்டாலின் வழங்கினார்
சென்னை:சென்னை மாநகராட்சியில் பணியில் இருந்த போது உயிரிழந்த 56 பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 1,210 நபர்களுக்கு கருணை அடிப்படையில் ஏற்கனவே பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பணியில் இருந்த போது உயிரிழந்த 56 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை, கோட்டையில் துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதில், 51 பேர் தூய்மை பணியாளர்களாகவும், ஒருவர் தட்டச்சராகவும், மூன்று பேர் ஆயாக்களாகவும், ஒருவர் சாலைப் பணியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டு கடிதங்களையும் துணை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் சுப்ரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.