தினமணி 30.06.2010
பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு
ஈரோடு, ஜூன் 29: பிரப் சாலையிலிருந்து ரயில் நிலைய சாலையை இணைக்கும் 80 அடி சாலையை திறந்துவிடவும், பன்னீர்செல்வம் பூங்கா அருகே நடைபெற்று வரும் எல் வடிவ மேம்பாலப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மாநகராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர் (படம்) .
ஈரோடு மாநகராட்சிக் கூட்டம் மேயர் குமார் முருகேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயர் வெங்கடாசலம், ஆணையர் பி.பாலச்சந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியவுடன், 80 அடி சாலையை உடனடியாக திறந்துவிட வேண்டும். பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நடைபெற்று வரும் எல் வடிவ மேம்பாலப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை திரும்பபெற மத்திய அரசை, தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக, மதிமுக மற்றும் தேமுதிக கவுன்சிலர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்களின் கோரிக்கை விவரம்:
அன்பழகன்: வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும் என்று ஆணையர் அறிவித்தார். இதற்காக கவுன்சிலர்களின் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. வார்டுகளில் குப்பை மலைபோல் தேங்கி கிடக்கின்றன. என்னுடைய வார்டில் 15 நாட்களாக குப்பை அள்ளப்படவில்லை. குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக லாரிகளை வாங்கவேண்டும்.
வேலு: என்னுடைய வார்டில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மக்களவை உறுப்பினர் தன்னுடைய தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். ஆனால் இங்கு ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க இயலாது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. மக்களவை உறுப்பினர் நிதி அளித்தும் கூட, குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணாமல் மாநகராட்சி நிர்வாகம் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது.
விஜயபாஸ்கர்: மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வண்டும். மாநகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
÷புதிய வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டி முடிப்பதற்கே முன்பே, வரி நிர்ணயம் செய்வதற்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்றுவிடுகின்றனர். இத்தகைய செயல்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
ராதாமணி: குப்பைகளை சேகரிக்கும் பெட்டிகள் சேதமடைந்துள்ளதால், இப்பெட்டிகளை லாரிகளில் எடுத்துச்செல்லும போது, சாலைகளில் குப்பை சிதறி வாகனங்களில் செல்வோருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது.
மதன்மோகன்: என்னுடைய வார்டில் 5 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்ட, கலைமகள் மற்றும் செங்குந்தர் பள்ளிகளுக்கிடையே பிரப்சாலையின் குறுக்கே இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியிட்டு பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
ஆணையர்: ரூ.10 லட்சம் மதிப்பில் வார்டுகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் அடுத்த மாதத்தில் செயல்படுத்தப்படும். கூடுதாக குப்பை லாரி மற்றும் பெட்டிகள் வாங்கப்படவுள்ளது. இதன்பிறகு குப்பை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும். நகரில் மொத்தமுள்ள 8 சதுர கிலோமீட்டர் பரப்பில் மாநகராட்சி மூலம் 199 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுóள்ளன. இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் இனிவரும் காலத்தில் அவசியத்தேவை எனக் கருதப்படும் இடங்களில் மட்டும் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க வேண்டும் என்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
÷ இதனால் தேவையை அறிந்து வார்டுகளில் புதிதாக ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றார்.
மேயர்: தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சரை நெரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு தனி நபருக்கு நாள் ஒன்றுக்கு 120 லிட்டர் தண்ணீர் தரவேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் ஈரோடு மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனை சமாளிக்க புதிதாக லாரி வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
80 அடி சாலையை திறந்துவிட வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் பூங்கா அருகில் எல் வடிவ மேம்பாலம் தேவையில்லை என்பதையும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.