தினமணி 25.08.2009
பன்றிக் காய்ச்சல்: மாநகர் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
கோவை, ஆக.24: பன்றிக் காய்ச்சல் குறித்து கோவை மாநகர் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை கோவை மாநகராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது.
பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி அச்சத்தைப் போக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் மூலமாக மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கியுள்ளது.
ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, சிங்காநல்லூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மேயர் ஆர்.வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் விழிப்புணர்வு இயகத்தைத் துவக்கி வைத்தனர்.
பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், அறிகுறி தென்பட்டவர்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, நோய் கண்டறியும் சோதனை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
துணை மேயர் நா.கார்த்திக், மண்டலத் தலைவர்கள் வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி, சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, மாநகராட்சி நகர் நல அலுவலர் தங்கவேலு, உதவி நகர்நல அலுவலர் சுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து ஆணையர் அன்சுல் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியது:
கோவையில் இதுவரை 127 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டது. இவர்களில் 37 பேருக்கு மட்டுமே அக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதில் 23 பேர் மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். உரிய சிகிச்சைக்குப் பிறகு இவர்கள் குணமடைந்துள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. இதை தெளிவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு இயக்கத்தை மாநகராட்சி துவங்கியுள்ளது. பன்றிக் காய்ச்சல் குறித்த விவரங்கள் அடங்கிய 1 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இவை மாநகரப் பகுதி முழுவதும் அந்தந்த சுகாதார ஆய்வாளர்களால் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். மக்கள் கூடும் இடங்கள், பஸ் நிலையங்களில் மெகா ஃபோன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த விழிப்புணர்வு நடவடிக்கை தொடரும் என்றார்.