தினமலர் 01.03.2010
பம்மல் நல்லதம்பி சாலையில் கால்நடைகள் ஆக்கிரமிப்பு
பம்மல் :பம்மல் நகராட்சிக்குட்பட்ட நல்லதம்பி சாலை, முனுசாமி தெரு போன்ற முக்கிய சாலைகளில் கால்நடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் நடமாட முடியாமல்அவதிப்பட்டு வருகின்றனர்.
சாணக்கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பல்லாவரத்தையும், பொழிச்சலூரையும் இணைக்கும் மிக முக்கிய சாலை பம்மல், நல்லதம்பி சாலை. பம்மல் மெயின் சாலைக்கு மாற்று சாலையான இச்சாலையை “பீக் அவர்‘ நேரத் தில் நூற்றுக்கணக்கான வாகனங் கள் பயன்படுத்துகின்றன.
இச் சாலையின் மையப்பகுதியில் முனுசாமி தெரு இணைகிறது.இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. முனுசாமி தெருவில் தனியார் சிலர், நூற்றுக் கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இவற்றை தொழுவம் அமைத்து பராமரிக்காமல், சாலையை அவர்கள் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், முனுசாமி தெருவையும், பம்மல் நல்லதம்பி சாலையையும் கால்நடைகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.இதனால், வழக்கமான போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளின் கழிவுகளால் அப்பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.கால்நடைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தெரு முழுவதும் மாட்டுச் சாணமாக காட்சியளிப்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்கள் பம்மல் நகராட்சியில் பலமுறை புகார் செய்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “பம்மல் நகராட்சியின் பல பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
கிராமங்களில் இருப்பது போல இங்கு மாட்டுத் தொழுவம் இல்லை. இதனால், பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் பொது இடங்களிலேயே ஆடு, மாடுகளை கட்டிப் போடுகின்றனர்.இவர்களில் சிலர், பால் கறக் கும் நேரம் தவிர மற்ற நேரங் களில் கால்நடைகளை பற்றி கவலைப்படுவதில்லை. குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் கால்நடைகளுக்கு தொழுவம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகள் உள்ள பகுதிகளில் கொசுத் தொல்லையை தவிர்க்க கொசு மருந்து தெளிக்க வேண்டும்,’ என்றனர்.பம்மல் நகராட்சி தலைவர் கருணாநிதி கூறுகையில்,”பம்மலில் கால்நடைகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து புகார்கள் வந்துள்ளன. நகராட்சி சுகாதார அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்துள்ளனர்.எச்சரிக்கையை மீறுவோரின், கால்நடைகளை பிடித்து, நகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைப்பது வழக்கம்.நகராட்சியில் தனியாக மாட்டுத் தொழுவம் இல்லை. சிட்லப்பாக்கத்தில் உள்ள தொழுவத்திற்கு மாடுகளை கொண்டு செல்வதில் பல சிரமங்கள் உண்டு.மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கும் பட்சத்தில், நகராட்சி பகுதியிலேயே மாட்டுத் தொழுவம் அமைத்து, இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.