தினமணி 06.08.2010
பயன்பாட்டுக்கு வந்தது ஒசூர் புதிய பேருந்து நிலையம்
ஒசூர், ஆக.5: ஒசூரில் கட்டப்பட்ட அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து நிலையத்துக்கு அப்போது தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் 30.08.2007-ம் தேதி அடிக்கல் நாட்டினார். ரூ.11 லட்சத்தில் 3 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டன. கடந்தஜூலை 18-ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேருந்து நிலையத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆனால் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வர காலதாமதமானது. இதனால் ஒசூர் நகர மக்கள் அதிருப்திக்கு உள்ளாயினர். இந்நிலையில் வியாழக்கிழமை முதல் முறைப்படி பேருந்து நிலையம் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பெங்களூர் செல்லும் பேருந்துகள் முன்புற வழியாகச் செல்கின்றன. நகரப் பேருந்துகள் பின்னால் சென்று வெளியில் வரும் வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து சென்னத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வந்த தாற்காலிக பேருந்து நிலையம் அகற்றப்பட்டது.