தினமணி 03.08.2010
பயன்பாட்டுக்கு வராத நவீன தகன மேடை
திருவண்ணாமலை, ஆக. 2: திருவண்ணாமலை நகராட்சி சார்பில் ரூ.58 லட்சம் செலவில் கட்டப்பட்டு அமைச்சர் எ.வ. வேலுவால் திறக்கப்பட்ட நகராட்சி நவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு வராமல் மூடிக் கிடக்கிறது.
பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவண்ணாமலை நகரில் 39 வார்டுகள் உள்ளன. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். கிரிவலப் பாதையில் உள்ள ஈசானிய மைதானத்தில் இடுகாடு உள்ளது. அதன் அருகே மிகப்பெரிய குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. நகரின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஈசானிய மைதான இடுகாட்டில்தான் உடல்களை தகனம் செய்கின்றனர்.
அருகில் குப்பைக் கிடங்கு உள்ளதால், ஈமச்சடங்கு செய்ய வருவோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் நகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணும் வகையில் அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க திட்டமிட்டது. மரக்கட்டைகளை எரித்து அதன் மூலம் உண்டாகும் எரிவாயு மூலம் சடலங்களை எரிக்கும் வகையில் இந்த தகன மேடை ரூ.58 லட்சம் செலவில் கட்டப்பட்டது.
தகன மேடை பராமரிப்பை நகரின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு அல்லது தனியார் தொண்டு நிறுவன பராமரிப்பில் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து ஏப்ரல் மாதம் உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு இந்த எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார்.
திறப்பு விழா கண்டு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இந்த எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. வழக்கம்போல் சடலங்கள் அருகில் உள்ள இடுகாட்டில் எரிக்கப்படுகின்றன. இதுகுறித்து நகராட்சி ஆணையர் கு.சேகரிடம் கேட்டபோது,நகராட்சியின் நவீன தகன மேடையை ஒரு குழுவிடம் ஒப்படைத்து பராமரிக்க உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் எரிவாயு தகன மேடை செயல்படத் தொடங்கும் என்றார்.