தினமலர் 06.10.2010
பராமரிப்பின்றி பாழாகிறது கடலூர் நகராட்சி பூங்கா
கடலூர்: கடலூர் நகராட்சியால் 37.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக் கப்பட்ட சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உரிய பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது.கடலூர் நகர மக்கள் குடும்பத் துடன் பொழுது போக்கிட இடம் இல்லாத குறையை போக்கிடும் பொருட்டு கடந்த 2004-05ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே நகராட்சிக்கு சொந்தமான பூங்காவை சீரமைக்க அப்போதைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பொது நிதி 28 லட்சம் ரூபாய், ராஷ்டிரிய சம்விக்யா யோஜனா திட்டத்தில் 4 லட்சம், சிறுசேமிப்பு ஊக்கத் தொகையில் 3.90 லட்சம், இரண்டாவது மாநில நிதிக்குழு பரிந்துரையில் 1.60 லட்சம் ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 50 ரூபாய் செலவில் நகராட்சி நிர்வாகத்தால் புனரமைக்கப்பட்டது.
அதில் வயோதிகர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ஊஞ்சல்கள், யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங் குகள் வடிவிலும், பல அடுக்கு சறுக்கு மரங்கள், சுழல் சறுக்கு மரங்கள், “சீசா‘ உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட் டன. மேலும், அனைவரையும் கவரும் வகையில் “டால்பின்‘, “நத்தை‘ வடிவில் வண்ணமையமான நீரூற்றுகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி திறக்கப்பட்டது.பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த அழகிய பூங் காவிற்கு மக்கள் கூட்டம் வருகை அதிகரித்தது. பூங்காவை தொடர்ந்து பராமரிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் நுழைவு கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டது.
பின்னர் இந்த கட்டணத்தை 2 ரூபாயாக உயர்த்தப்பட்டது.கட்டணத்தை உயர்த்தி வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்திய தற்போதைய நகராட்சி நிர்வாகம் பூங்காவை தொடர்ந்து பராமரிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பூங்காவில் சிறுவர்கள் விளையாட அமைக் கப்பட்டுள்ள பெரும்பாலான சாதனங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நீரூற்றும் இயங்காமல் பொம்மைகள் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. மின் விளக்குகளும் சரியாக எரிவதில்லை.சிறுவர்கள் அதிகம் விளையாடும் ஊஞ்சல் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டி மூடக்கூட நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதன் காரணமாக ஊஞ்சல் பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. வேறு வழியின்றி சேற்றிலேயே சிறுவர்கள் விளையாட வேண்டியுள்ளது. இதன் காரணமாக பூங்காவிற்கு பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.பல லட்சம் ரூபாய் செலவில் திட்டங்களை கொண்டு வர ஆர்வம் காட்டும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், அதனை தொடர்ந்து பராமரித்திட ஆர்வம் காட்டாதது ஏனோ தெரியவில்லை.