தினமலர் 22.03.2010
பற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் அளவை குறைக்க முடிவு?
கோவை : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சிக்கு, அன்றாடம் வழங்கி வந்த குடிநீரின் அளவை குறைத்துள்ளது. மாநகரப்பகுதியில் குடிநீர் வினியோகத்தில் மாற்றம் செய்வது குறித்து மாநகராட்சி யோசித்து வருகிறது.
கோவை மாநகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர் மட்டம் கோடையில் கொளுத்தும் வெய்யிலிற்கு குறைந்து வருகிறது. குடிநீருக்கு பஞ்சம் வராமல் தடுக்க, குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சிக்கு வழங்கும் குடிநீரின் அளவை குறைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க சிறுவாணி அணையிலிருந்து, தினமும் 9.8 கோடி லிட்டர் குடிநீரை குடிநீர் வடிகால் வாரியம் வழங்கியது. மாநகராட்சிக்கு தினமும் வழங்கப்படும் குடிநீர் அளவு, நாள் ஒன்றுக்கு 8.6 கோடி லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு 7.1 கோடி லிட்டர் தண்ணீரும், வழியோர கிராமங்கள் மற்றும் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சிகளுக்கு நாளொன்றிற்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இதே முறை பின்பற்றினால் ஜூன் 20 ம் தேதி வரை, அணையில் இருக்கும் குடிநீரை கொண்டு சமாளிக்கலாம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். சிறுவாணி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். ‘குடிநீர் பிரச்னை ஏற்படாது‘ என, குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகின்றனர்.கோவை மாநகரில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் முறையை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் யோசித்து வருகிறது