தினமணி 09.12.2009
பல்லடம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு வைப்பு தொகை உயர்த்த எதிர்ப்பு
பல்லடம், டிச. 8: பல்லடம் நகராட்சி அவசர கூட்டம் தலைவர் ஆர்.ராமமூர்த்தி தலைமையில் செவ்வாய்கிழமை நடந்தது.
இதில் துணைத்தலைவர் சேகர், செயல்அலுவலர் பெஞ்சமின்குணாசிங் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். அத்திகடவு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பழைய குழாய் இணைப்புகள் மற்றும் வழங்கப்படவுள்ள புதிய வீட்டு இணைப்புகளுக்கு வைப்பு தொகை உயர்த்த கூடாது என்று கவுன்சிலர்கள் சரளைரத்தினசாமி, ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, கந்தசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க ரூ.7 ஆயிரம் வசூலிப்பது என்றும். பழைய குடிநீர் இணைப்பு வைத்து இருப்பவர்கள் ரூ.3 ஆயிரம் செலுத்திவுள்ளனர். மேலும் அவர்கள் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்கு போதிய காலஅவகாசம் அளிப்பது என்றும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.1000 வீதம் தொடர்ந்து 4 ஆண்டுகளில் வைப்பு தொகை முழுவதையும் வசூலிப்பது என்றும் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி அனுமதி பெற்றவுடன் வைப்பு தொகை வசூலிக்கப்படவுள்ளது.