பள்ளிகளில் சுகாதாரம் குறித்து ஆய்வு
கடலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளின் சுகாதார நிலை குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என நகராட்சித் தலைவர் சி.கே.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடலூர் நகராட்சி பகுதியில் 21 அரசு மற்றும் தனியார் துவக்கப் பள்ளிகள் மற்றும் 16 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 40 பள்ளிகள் இயங்கிவருகிறது. இதில் சுமார் 25,000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகள் பலவற்றில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதுதொடர்பாக புகார்கள் வந்ததையடுத்து நகராட்சி சார்பில் அவசரக் கூட்டம் அண்மையில் நடந்தது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் சி.கே.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது: கடலூர் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தாளாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. பள்ளிகளில் குடிநீர் வசதி தரமானதாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு எண்ணிக்கைக்கு ஏற்ப 50 பேருக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடமும், 200 பேருக்கு ஒரு கழிப்பறையும் என்ற அடிப்படையில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.
காற்றோட்டமான சூழலுடன் கூடிய கட்டட அமைப்புகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலோ அதை சுற்றியோ சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பள்ளி வளாகத்தில் கழிவுநீரை தேக்கி வைக்கக்கூடாது. அவ்வாறு தேங்கியிருக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தலின்படி பள்ளி வளாகம், கட்டடம் இருத்தல் வேண்டும். சுகாதார தன்மைகளில் குறைபாடு இருந்தால் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து பள்ளிகளில் நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்வர். பள்ளி கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.