தினகரன் 16.11.2010
பள்ளிபாளையத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம் மக்களுக்கு அறிவுரை
பள்ளிபாளையம், நவ.16: பள்ளிபாளையத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இதில் மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளிபாளையத்தில் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொசு ஒழிப்பு மருந்தடிப்பு, அபேட் மருந்து கரைசல் தெளித்தல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை நகர்மன்ற தலைவர் குமார், நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 21 வார்டுகளுக்கும் சென்ற நகராட்சி பணியாளர்கள் நீர்நிலைகளில் அபேட் மருந்து கரைசலை ஊற்றி கொசுக்களின் புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
லாரி, சைக்கிள்களில் இயந்திரங்களை வைத்து கொசு ஒழிப்பு புகை மருந்தடிப்பு பணியை மேற்கொண்டனர். வீடுகளில் உள்ள தொட்டிகள், பானைகளில் அபேட் மருந்து கரைசலை தெளித்தனர். மக்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அந்த துண்டு பிரசுரத்தில், “தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகளை 4 நாட்களுக்கு ஒருமுறையும், தண்ணீர் பாத்திரங்களை வாரம் ஒருமுறையும் சுத்தம் செய்ய வேண்டும். சாக்கடையில் குப்பைகளை கொட்டி தண்ணீர் ஓட்டத்தை தடை செய்ய கூடாது“ என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.