தினமலர் 08.02.2010
பள்ளியில் தயாராகிறது விளையாட்டு அலுவலகம்
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகம், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள், தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின், ஒவ்வொரு துறைக்கும் புதிய அலுவலகங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட துவங்கி வருகிறது. மாவட்ட விளையாட்டு அலுவலராக, கடந்த மாதம் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். தற்போது, மாவட்ட விளையாட்டு அலுவலகம், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைப்பதற்கான பணிகள் நடத்து வருகின்றன.
மாவட்ட விளையாட்டு அலுவலர் வெங்கட்ராமன் கூறுகையில்,””மாவட்ட விளையாட்டு அலுவலகம் நஞ்சப்பா பள்ளியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது. மின் இணைப்புக்கான பணிகள் செய்யப்பட வேண்டும். அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மாவட்ட விளையாட்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும்,” என்றார்.