தினமணி 21.10.2010
பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடுசென்னை, அக். 20: ஊராட்சிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை கோவை அரசூரில் உள்ள மகாராஜா கலை அறிவியல் கல்லூரியின் தலைவர் கே. பரமசிவம் தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பது:
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 172 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் (மதிப்பீடுகள் மற்றும் வரி வசூலிப்பு) விதிகள், 1999-ன் விதி 15 ஆகியவற்றின்படி ஊராட்சிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை, விதி 15-ல் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஊராட்சிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது.
இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஓய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 23-க்கு தள்ளிவைத்தனர்.