பழனியில் அனைத்துத் துறைகள் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம்
அனைத்துத் துறைகளும் இணைந்து, பழனியில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டன.
பழனியில் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பு, பிளாட்பாரக் கடைகள், தள்ளு வண்டிகள் ஆகியவற்றால், இங்கு வரும் முருக பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கடந்த பங்குனி உத்திரத் திருவிழாவின்போது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பு அகற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில், நீண்ட காலமாக அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டது.
இது, பக்தர்கள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதன்பின்னர் சில வாரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து, 3 நாள்களாகத் தொடர்ந்து அறிவிப்புகளும் செய்யப்பட்டன.
அதன்படி, பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் திருக்கோயில் நிர்வாகமும், காந்தி ரோடு, ஆர்.எப். ரோடு, சந்நிதி வீதி, கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் நகராட்சி நிர்வாகமும், திண்டுக்கல் ரோடு, புதுதாராபுரம் ரோடு, பழைய தாராபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை நிர்வாகமும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டன.
அப்போது, அடிவாரம் விஞ்ச் நிலையம் அருகே இருந்த பல கடைகளும், மார்க்கெட் பகுதியில் நகராட்சியின் கடைகளை விஸ்தரித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களும் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
நெடுஞ்சாலைத் துறையின் இருபக்கமும் இருந்த பிளாட்பார கடைகளும் ஜேசிபி இயந்திரத்தால் தரைமட்டமாக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், பழனி ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், இணை ஆணையர் பாஸ்கரன், வட்டாட்சியர் இதாயத்துல்லாகான், டி.எஸ்.பி. குப்புராஜ், துணை ஆணையர் ராஜமாணிக்கம், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சங்கர், உதவிப் பொறியாளர் ஜெயபால், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.