தினமணி 16.12.2009
பழனியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பழனி, டிச.15: பழனி அடிவாரம் அய்யம்புள்ளி சாலையில் சாலைப் பணிக்குக் கொட்டப்பட்டிருந்த கட்டட இடிபாடுகளை அகற்றி தரமான ஜல்லிகளைக் கொட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பழனியில் நகராட்சி, திருக்கோயில் மற்றும் வருவாய்த் துறையினரின் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் ஆய்வு செய்தார்.
பழனியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பஸ் நிலையப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், திருவிழா காலம் விரைவில் துவங்க உள்ளதால், 15 நாள்களுக்குள் விரைந்து கட்டுமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கும் நிலை நேரிடும் என எச்சரித்தார். பின்னர் அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இருந்து கிரி வீதி செல்லும் சாலையை ஆய்வு செய்த ஆட்சியர், சாலையைத் தோண்டி சமன் செய்ய, வீட்டுக் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டதை உடனடியாக அகற்றி, ஒப்பந்த விதிகளின்படி முறையான ஜல்லி கற்களை கொட்ட உத்தரவிட்டார்.
மேலும் சாலையில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார வயர்களை சரிசெய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து கிரி வீதி, தேவஸ்தான பார்க் ஆகியவற்ரை ஆய்வு செய்து பணிகளை விரைவு செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், கோட்டாட்சியர் நாராயணன், பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் சித்திக், வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.