தினமணி 17.09.2010
பழனி நகராட்சியில் நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டம்
பழனி,செப்.16: பழனி நகராட்சி அலுவலகத்தில் நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி நகராட்சி அலுவலக பழனியாண்டவர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதன் நகர்மன்றத் தலைவர் இராஜமாணிக்கம் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் மூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட முதுநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜமாணிக்கம், வட்ட பூச்சியியல் வல்லுனர் எஸ்தர் ஆகியோர் புரஜெக்டர் உதவியுடன் கொசுக்களால் ஏற்படும் பல்வேறு காய்ச்சல் வகைகள் குறித்து விளக்கினர். கொசுக்கள் தங்கும் இடங்களான பழைய டயர், தண்ணீர்த்தொட்டி, ஆட்டுக்கல் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்காவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என விளக்கினர். கொசுக்களை கட்டுப்படுத்த கொசுமருந்து அடிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கவுன்சிலர் முருகபாண்டியன், நகராட்சி உணவு ஆய்வாளர் அபுதாகீர், துப்புரவு ஆய்வாளர்கள் மணிகண்டன், நெடுமாறன், பழனிச்சாமி, ஹனீபா மற்றும் பிற துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.