தினமணி 21.11.2209
பழுதடைந்த பாலாற்றுக் குடிநீர் குழாயை சரி செய்யும் பணி தீவிரம்
காஞ்சிபுரம், நவ.20: காஞ்சிபுரம் நகரத்துக்கு வரும் பாலாற்று குடிநீர்க் குழாய் ஓரிக்கை கிராமம் அருகே பழுது ஆனதால் அதனை சரி செய்யும் பணியினை நகராட்சியினர் 2 நாள்களாக மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் கருப்பையா கூறியது: காஞ்சிபுரம் நகரத்துக்கு பாலாற்றிலிருந்து ஓரிக்கை கிராமம் வழியாக 400 மி.மீ. விட்டம் அளவு கொண்ட குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதில் ஓரிக்கை பஸ் நிலையம் அருகே 6 மீட்டர் நீளம் கொண்ட குழாய் உடைந்து நீர் வியாழக்கிழமை வெளியேறியது. இதனை அறிந்தவுடன் ஜேசிபி, நீரை வெளியேற்றும் லாரி மற்றும் 15 பணியாளர்களுடன் குழாயை மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கான 400 மி.மீ. அளவுள்ள குழாய் தாம்பரம் நகராட்சியிடமிருந்து வாங்கிவரப்பட்டுள்ளது.
தற்போது நகரத்திலுள்ள பஸ் நிலையம், ராஜாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளிலுள்ள மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு பாலாற்றிலிருந்து கொண்டுவரப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டு, திருப்பார்க்கடலிலிருந்து குடிநீர் கொண்டுவந்து ஏற்றப்பட்டது.
இதன்மூலம் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவுக்குள் குழாய் பழுது சரிசெய்யப்படும் என்றார்.