தினமலர் 12.03.2010
பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு : அகற்ற மாநகராட்சி விடாமுயற்சி
திருப்பூர்: திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. பல கடைக்காரர்கள் விற்பனை பொருட்களை மக்கள் நிற்கும் பகுதிகளில் பரப்பி வைக்கின்றனர். இதனால், பயணிகளுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.கடைகளில் வெளியாகும் குப்பையையும், குப்பை தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் வீசி விடுகின்றனர். இதுதவிர, தள்ளுவண்டி கடைகளும் பஸ் ஸ்டாண்டிற்குள் அதிகமாக ஆக்கிரமிக்கின்றன. இதனால், பஸ்களை நிறுத்தக்கூட வழியின்றி கடும் நெருக்கடி ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஆங்காங்கே டூவீலர்களை நிறுத்துவதோடு, கண் மூடித்தனமாக பஸ்களுக்குள் புகுந்து செல்வதால், பயணிகள் மீது மோதும் நிலை உள்ளது.இரவு நேரத்தில் மட்டுமின்றி பகல் நேரத்திலும், பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட இருக் கைளுக்கு இடையே, அங்கு சுற்றித்திரியும் வழிப்போக்கர்கள் படுக்கின்றனர். இதனால், பயணிகள் இருக்கைகளை பயன்படுத்த முடிவதில்லை.கடந்த மாதம், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது; இருக்கைகளுக்கு இடையே படுத்து கிடந்தவர்களும் துரத்தியடிக்கப்பட்டனர். வணிக வளாக கடைக்காரர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.இருப்பினும். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் கடைக்காரர்கள், பொருட்களை நடைபாதை பகுதிகளில் வைத்து விற்பனை செய்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலகம் உள்ள பகுதியிலேயே பலர் படுத்து உறங்கினர். பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள வணிக வளாக சுவர்களும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அலங்கோலமாக காட்சியளித்தது.
கலெக்டர் சமயமூர்த்தி, பஸ் ஸ்டாண்ட் நிலை குறித்து விசாரித்துள்ளார்; பஸ் ஸ்டாண்டில் ஆய்வு மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளார். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று, மீண்டும் அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. மாநகராட்சி பணியாளர்களை கொண்டு, பஸ் ஸ்டாண்ட்டிற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தியது. கண்ட இடங்களில் படுக்கை விரித்தவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். மாநகராட்சி கழிப்பிட சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.பஸ் ஸ்டாண்டில் இருந்த சுகாதார பணியாளர்களிடம் கேட்ட போது, “இனி, பழைய பஸ் ஸ்டாண்ட்டை வாரம் ஒருமுறை கழுவி சுத்தம் செய்வோம்; பஸ் ஸ்டாண்ட் வளாகத்துக்குள் யாரும் படுத்து உறங்காதபடி கண்காணிக்கப்படும்,’ என்றனர்.