பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்
பண்ருட்டி பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அகற்றினர்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் தரைக் கடைகளும், வாடகைக் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து கடை வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பயணிகள் நிற்கக்கூட இடமின்றி தவித்தனர். மேலும் திருட்டுச் சம்பவங்கள் அதிக அளவு நடக்க ஏதுவாக இருந்து வந்தது.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கடந்த சில நாள்களாக நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.