தினமலர் 15.09.2010
பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் ரோடு மதிப்பீடு தயாரிக்கும் பணி
பொள்ளாச்சி :பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் கான்கிரீட் ரோடு போடுவதற்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்புக்கு பிறகு, இரண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்டினுள் தார் ரோடு பெருமளவு சேதமடைந்துள்ளதால், புதிதாக கான்கிரீட் ரோடு போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், பழைய பஸ் ஸ்டாண்டின் உள்பகுதி நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் முழுமையாக சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நகாரட்சி பொறியாளர் மோகன் கூறுகையில், “”பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச கழிப்பிடம் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் 15 லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் உட்காரும் இருக்கைகள், தரை, மேற் கூரைகள் புதுப்பித்து, பெயிண்டிங் அடிக்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்டினுள் கான்கிரீட் ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த சதுர மீட்டர் எவ்வளவு என்று கணக்கிட்டு மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு அனுமதி பெறப்பட்டதும் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்” என்றார்.