தினமலர் 14.05.2010
பஸ் ஸ்டாண்டு கடைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் கரூர் நகராட்சி கமிஷனர் நடவடிக்கை
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டு கடைகளில், நகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவினர் நேற்று அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆண், பெண் சுயஉதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை கடந்த வாரம் கலெக்டர் உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார்.அதன்படி, தலா 10பேர் கொண்ட குழுவினர் காலை 6 முதல் மதியம் ஒரு மணி வரையும், மதியம் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரையும், மாலை 6 முதல் 10 மணி வரை ஐந்து பேர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு நாள்தோறும் தலா 100 ரூபாய் கூலி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், சுயஉதவிக்குழு நபர்களால் முழுமையான தூய்மைப் பணிகளை பஸ் ஸ்டாண்டில் மேற்கொள்ள முடியவில்லை. தூய்மைப் பணியில் ஈடுபடுவோர், ”பஸ் ஸ்டாண்டிலுள்ள கடைகள் நடைபாதையில், ஐந்து முதல் எட்டு அடி வரை ஆக்ரமித்து, தங்களது கடை ஸ்டாண்டு உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர். கடைகளில் குப்பை சேகரிப்பு கூடைகள் வைக்கப்படுவதில்லை. இதனால், பணிகளை முழுமையாக செய்யமுடியவில்லை. கடையினர் ஆக்கிரமிப்புக்களை அகற்றிக்கொடுத் தான், முழுமையான அளவில் தூய்மைப் பணி செய்ய முடியும்,” என நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்தனர்.
நேற்று காலை கமிஷனர் உமாபதி தலைமையில், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன், நகரப் பொறியாளர் ராஜா, கட்டிட ஆய்வாளர் ஜானகிராமன், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், துப்புரவு ஆய்வாளர் செந்தில், தேவராஜ், சுகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பஸ் ஸ்டாண்டு கடைகளில் நேரடியாக சென்று அதிரடியாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளிலும் கடையினர் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் ஆய்வும் நடத்தப்பட்டது. வரி, வாடகை செலுத்தாத கடைகள் உடனடியாக செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைத்து தரும்படி கடையினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், நகராட்சி கமிஷனர் உமாபதி கூறியதாவது: கரூர் பஸ் ஸ்டாண்டில் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளும் திட்டம் துவங்கப்படுகிறது. அவர்கள் பணியை மேற்கொள்வதுக்கு இடையூறாக இருந்ததால், பஸ் ஸ்டாண்டு கடைகள் முன் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்ரமிப்பு செய்தால், மீண்டும் கடைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்படும். ஜூன் முதல் தேதியிலிருந்து கரூரை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் நகராட்சியில் 5.42 கோடி சொத்து வரி, 1.2 கோடி ரூபாய் தொழில் வரி, குடிநீர் கட்டணம் 2.75 கோடி ரூபாய், இதர வரவினங்கள் 2.1 ஒரு கோடி ரூபாய் உட்பட மொத்தம் 12 கோடி ரூபாய் வரி நிலுவை உள்ளது. 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவை உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு தவணை முறையிலும் செலுத்துவதுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பாக்கியுள்ள உள்ளவர்களுக்கு சில நாட்களில் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த மாதத்துக்குள் கட்டாயம் குடிநீர் வரி மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய காலத்தில் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். 78 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.