பாகுபாடின்றி குடிநீர் இணைப்பு வழங்க கோரிக்கை
பாகுபாடு இல்லாமல், அத்திக்கடவு குடிநீர் இணைப்பு வழங்க, நீலம்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சூலூர் அடுத்த நீலம்பூர் ஊராட்சியில் நீலம்பூர், வெங்கிட்டாபுரம், குளத்தூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஊராட்சியில் அத்திக்கடவு குடிநீருக்கான வீட்டு இணைப்பு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீலம்பூரை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து ஊராட்சி உறுப்பினர் துரை உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறியதாவது:
நீலம்பூர் ஊராட்சியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த சில மாதங்களாக குளத்தூர் கிராமத்தில் மட்டும் அதிகளவில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே பகுதியில் மட்டும் இணைப்புகள் வழங்காமல், மற்ற பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்கவேண்டும், என, கலெக்டர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் பயன் இல்லை. இதையடுத்து, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இரண்டு மாதத்துக்குள் நீலம்பூர் பகுதிக்கும் குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படும், என ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.ஊராட்சித்தலைவர் லதா கூறுகையில்,” நீலம்பூர் கிராமத்துக்கு அத்திக்கடவு குடிநீர் வழங்கும் வகையில், விளாங்குறிச்சியில் இருந்து தனி குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. பணி முடிந்ததும் வீட்டு இணைப்பு வழங்கப்படும்,’ என்றார்.