தினமணி 26.06.2013
பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
விருதுநகர் நகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்
பணிகளை 3 மாதத்துக்குள் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
நகராட்சிக் கூட்டத்தில் தலைவர் மா. சாந்தி உறுதி அளித்தார்.
விருதுநகர் நகராட்சியின் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் மா. சாந்தி தலைமை வகித்தார்.
ஆணையர்(பொறுப்பு) மணி மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.
இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், நகராட்சி உறுப்பினர்களுக்கும்
இடையே நடந்த விவாதம் வருமாறு: விருதுநகர் நகராட்சியின் நகராட்சி
குறிப்புகள் மற்றும் துறைகள் ஆகியவையும், அன்றாட வரவு, செலவுகளையும்
வெளியிட வேண்டும்.
பாதாளச் சாக்கடை திட்டம் கடந்த 5 ஆண்டுகளாகவே முடிக்கப்படாமல்
இருக்கிறது. மேலும், பொதுமக்களிடம் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கு
அதிகளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்களிடம் புகார்கள் வந்துள்ளன.
எந்த மதிப்பீட்டில் பணம் வசூல் செய்யப்படுகிறது என்பது குறித்து பொதுமக்கள்
அறிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், பல்வேறு பகுதிகளில் குறுகிய சந்துகளில் கழிவுநீரை
வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சியின் மையப் பகுதியான
தெப்பத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே இதனைச்சுற்றிலும்
வேலி அமைப்பதற்கு முன்வர வேண்டும்என்றனர்.
நகராட்சியின் மையப் பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் குடிநீர்
விநியோகம் 11 நாள் முதல் 14 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம்
செய்யப்படுகிறது. ஆனால் கிழக்கு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல்
கிடைக்கிறது. வறட்சி காலத்தில் அனைத்து பகுதிகளிலும் நீரேற்று நிலையங்களின்
மூலம் சரிசமமாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றனர்.
இவற்றுக்கு பதிலளித்து தலைவர் மா. சாந்தி பேசியதாவது: விருதுநகர்
நகராட்சியின் வரவு, செலவு குறித்து வெளியிடுவதற்கு அரசு அனுமதி பெற
வேண்டும். நகராட்சி பொறியாளர் பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கு
பொதுமக்களிடம் பங்களிப்புத் தொகை வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம்
நாளொன்றுக்கு ரூ. 1 லட்சம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பணிகள் அனைத்தும் மூன்று மாதத்துக்குள் முடிப்பதற்கு மும்முரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெப்பக்குளத்தை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் குடிநீர்
விநியோகம் நகராட்சியின் கிழக்கு பகுதியில் அதிகம் இருப்பதாகவும், மற்ற
பகுதிகளில் குறைவாக இருப்பதால் 11 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர்
கிடைப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து பொறியாளர் ஆய்வு
செய்து வறட்சி காலத்தில் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்கும் வகையில் ஆய்வு
செய்து வழங்கப்படும் என தலைவர் கூறினார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.