பாதாளம் நோக்கி செல்லும் பவானிசாகர் நீர்மட்டம்:கடும் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம்
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் பாதாளம் நோக்கி செல்வதால், ஈரோடு மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம், 120 அடியாகும். இதில், சகதி, 15 அடி கழித்து நீர்மட்ட உயரம், 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு, 32 டி.எம்.சி., ஆகும்.
ஈரோடு மற்றும் கரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியை பசுமையாக வைத்துள்ள பவானிசாகர் அணை புன்செய்புளியம்பட்டி, சத்தி, கோபி, பவானி உள்ளிட்ட நகராட்சி மற்றும் நூற்றுக்கணக்கான டவுன் பஞ்சாயத்து, பஞ்சாயத்து பகுதிகளின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வருகிறது. தவிர அணையில் இருந்து வெளிவரும் கீழ்பவானி வாய்க்கால் மூலம், 2.07 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கும், பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலியங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த, 50 ஆயிரம் ஏக்கர் பாசனப்பகுதியும் வளம் பெறுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வள ஆதாரங்களாக விளங்குகிறது.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 71.39 அடியாக இருந்தது. அணையின் நீர் கொள்ளளவு, 11.54 டி.எம்.சி.,ஆக இருந்தது. இதனால் கடந்தாண்டு வறட்சியின்போது குடிநீருக்கு எவ்வித பிரச்சனையும் இல்லாமல், பாசனத்துக்காகவும், பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் நடப்பு ஆண்டில் நிலமை தலைகீழாக மாறியுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வருகிறது. அரசும் அவ்வப்போது பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைய தொடங்கியது.
அணையின் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில், குடிநீர் பிரச்னை ஏற்படும் என மக்கள் அஞ்சும் நிலையில், கடந்த ஏழு முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு சிறப்பு நனைப்பாக தண்ணீர் திறக்கப்பட்டது. சிறப்பு நனைப்பால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால் அணையில், 1.38 டி.எம்.சி., தண்ணீர் குறைந்தது.
நேற்று மாலை அணையின் நீர்மட்டம், 33.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 155 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு, 155 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு, 5 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது அணையின் நீர்மட்டம், கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை காட்டிலும், 37.59 அடி (10 டி.எம்.சி.,) தண்ணீர் குறைவாக உள்ளது.
இதனால் அணையின் நீர்தேக்க பகுதி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால், மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, நீலகிரி மலையில் மழை பெய்து, அணைக்கு நீர் வராவிட்டால், ஈரோடு மாவட்டத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.