தின மணி 19.02.2013
பாதாள சாக்கடைக் குழாயில் ஆலைக்கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.வெங்கடேசன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. இணைப்பொதுச்செயலர் புருஷோத்தமன் வரவேற்றார். பொதுச்செயலர் எம்.மருதவாணன் பேசினார்.
தீர்மானங்கள்: கடலூர் நகராட்சி கம்மியம்பேட்டை, மஞ்சக்குப்பம் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட எரிவாயு தகன மேடை 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு விடாமல் உள்ளதால் துருப்பிடித்து மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஜவான்பவன் இணைப்புச் சாலையில், பாலங்களில் உள்ளது போல் தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டும்.
நகரில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் ஆமா வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. முழுமை பெற்ற இடங்களிலோ குழாயில் உள்ள மண், கல் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஓடாத சாக்கடை குழாயில் பலர் இணைப்பு கொடுத்து கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாதாள சாக்கடை மூடிகளைத் திறந்து கழிவு நீர் மற்றும் ஆலைக் கழிவுகள் லாரிகள் மூலம் கொட்டப்படுகிறது.
இதனால் சாக்கடை குழாயில் பணியாற்றுபவர்களை விஷவாயு தாக்கும் அபாயம் உள்ளதை சம்மந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.