தினமணி 24.08.2010
பாதாள சாக்கடைத் திட்டம் இப்போது முடியாது
நாமக்கல், ஆக. 23: நாமக்கல்லில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இப்போது முடியாது. மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் அறிவித்துள்ளார்.
÷இந்ததிட்டம் 2005-ல் அறிவிக்கப்பட்டு 2006-ல் பணி ஆணை வழங்கப்பட்டது. 2010 ஜனவரி 31-ம் தேதிக்குள் இந்த திட்டம் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என நகர்மன்றத் தலைவரே அறிவித்துள்ளார். நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது.
÷நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் தலைமை வகித்தார்.
நகர்மன்ற உறுப்பினர் மா.மு. பாண்டியன் பேசியது:
÷ நாமக்கல் நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. பைப்-லைன் உடைதல், மின்சார தடை, மின்மாற்றியில் பழுது ஆகியவை ஒருபுறம் இருந்தாலும் நகராட்சி அலுவலர்கள் மெத்தனப் போக்கு உள்ளது. ஒரு பகுதிக்கு தேவைக்கேற்ப குடிநீர் விநியோகம் செய்வதும், மற்றொரு பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிப்பதும் வாடிக்கையாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் முடியுமா, முடியாதா என்ற சந்தேகம் இதுவரை மக்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், நகராட்சி கவுன்சிலர்கள் மத்தியிலும் தற்போது இதே சந்தேகம் உள்ளது. குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்ட பணிகள் முறையாக நடைபெறுவதில்லை. சாலைகளில் பேட்ஜ் ஒர்க் நடத்த வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் நகர்மன்றத்தை குடிநீர்வாரிய அதிகாரிகள் மதிப்பதில்லை. எனவே, அதிகாரிகளின் மெத்தனத்தை கண்டித்து அனைவரும் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்றார்.
நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் பேசியது: பாதாள சாக்கடை திட்டத்தில் பைப்–லைன் அமைக்கும் பணிகள் 85 சதம் முடிவடைந்துள்ளது. சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியும் நடைபெறுகிறது. ஒரு சில பகுதிகளில் பாறையாக உள்ளதால் பைப்–லைன் பதிக்க முடியவில்லை. எனவே, அங்கு சாலையின் ஒதுக்குப்புறமாக மூடிய குழாய்கள் மூலம் கழிவுநீரை அகற்றி பாதாளை சாக்கடை திட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 2 கோடிக்கு மேல் ஆகும். இதற்கான திட்ட வரையரை செய்து ஒப்புதல் பெற்று ஒப்பந்தம் அறிவித்து பணிகள் மேற்கொள்ள குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும். நகராட்சி அலுவலர்கள் முறையாக பணிபுரிகின்றனர். குடிநீர் வாரியத்தினர் மட்டும்தான் நகராட்சி கூறுவதை ஏற்காமல் செயல்படுகின்றனர். தேவையெனில் வாரிய அலுவலகம் முன் தர்ணா செய்யலாம் என்றார்.
திமுக உறுப்பினர் இம்ரான்: நகராட்சிக்கு கிடைக்கும் வரி வருவாய் முறையாக வருவதில்லை. ஏனெனில், யாரும் முறையாக வரி செலுத்துவதில்லை.
வணிகவளாகம் வைத்துள்ள நபர் சொற்ப அளவிலான வரியே செலுத்தும் நிலையுள்ளது. எனவே, அனைத்து வார்டுகளிலும் முறையாக அளந்து வரி விதிக்க வேண்டும் என்றார் அவர்.
நகராட்சித் தலைவர்: எந்தந்தப் பகுதியில் தேவையோ அந்த வார்டு உறுப்பினர்கள் எழுத்துப் பூர்வமாக கடிதம் அளித்தால் நகராட்சி மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகராட்சியின் மொத்த வருவாயில் 54 சதம் ஊழியர்களுக்கே ஊதியமாக வழங்க வேண்டிய நிலையுள்ளது. எனவே, வருவாய்க்கு தகுந்தபடியே திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இரா. செல்வராஜ் தகவல் தெரிவித்தார். மேலும், இக் கூட்டத்தில், 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.