பாதாள சாக்கடைத் திட்டம்: நகர்மன்றத் தலைவர் ஆய்வு
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை நகர்மன்றத் தலைவர் பாஸ்கர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.
விழுப்புரத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் பாதாள சாக்கடைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்துக்கான மதிப்பீடு முதலில் ரூ.35.67 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் திருத்திய மதிப்பீடாக ரூ.49.36 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்காக காகுப்பம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அங்கு பணிகள் முடிவுற்றுள்ளன.
எருமனந்தாங்கல் பகுதியில் மற்றொரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன.
இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நகர்மன்றத் தலைவர் பாஸ்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், பொறியாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.