தினமணி 02.09.2009
பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்குவதைத் தடுப்பது எப்படி? ஆராய உயர் நீதிமன்றம் உத்தரவு
தினமணி 02.09.2009
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி அடைப்புகளை அகற்றும் போது பல்வேறு சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதைத் தொடர்ந்து, அடைப்புகளை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்குப் பிறகும், பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் தொடர்ந்து இறக்கப்படுவதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதிபதி பி.ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பாதாள சாக்கடைகள் குறித்து ஆராய, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவினர், பாதாள சாக்கடையில் திடக் கழிவுகள் கொட்டுவதைத் தடுப்பது மற்றும் அவற்றில் ஏற்படும் அடைப்புகளை அகற்றத் தேவையான கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக, பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.