தினகரன் 17.12.2010
பாதாள சாக்கடை கட்டணத்துக்கு அரசு மானியம் வழங்க வலியுறுத்தல்
விருதுநகர், டிச. 17: பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக மக்கள் செலுத்த வேண்டிய வைப்பு நிதிக்கு அரசே மானியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு இங்கு ரூ. 23 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிந்துவிட்டது. பாதாளச்சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு பெற ரூ. 3 ஆயிரம், கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் என டெபாசிட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை ஒரே தவணையில் கட்டவேண்டும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் பகுதி நகரச்செயலாளர் காதர் மொய்தீன் கூறுகையில், ”பாதாளச்சாக்கடை திட்டத்திற்கு அதிகளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பல கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது. கட்டணத்தை மக்களிடம் வசூலிக்காமல் அரசே மானியமாக வழங்கவேண்டும்,” என்றார்.
விருதுநகர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு முழு மானியம் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு நகர்நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக முதல்வருக்கு விருதுநகர் நகர்நல அமைப்பு சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டம் 2006ல் துவங்கப்பட்டு 2008ல் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. பாதாள சாக்கடை திட்டப்பணியால் விருதுநகரில் சாலைகள் படுமோசமான நிலைக்கு சென்றுவிட்டன.
பாதாள சாக்கடை திட்டத்திற்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக குறைந்தபட்சம் ரூ. 3 ஆயிரம் முதல் அதிகப்பட்சமாக ரூ. 35 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்த நிர்பந்தம் செய்யப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் செலுத்த வேண்டிய தொகை யை முழு மானியமாக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.