தினகரன் 28.09.2010
பாதாள சாக்கடை சேவை கட்டணம் எதிர்ப்பு கிளம்ப வாய்ப்பு
கோவை, செப். 28:கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடைக்கு மாதாந்திர சேவை கட்டணத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.
கோவை மாநகராட்சியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டத்திற்கு மாதாந்திர சேவை கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கிடையாது. முதல் முறையாக மாதாந்திர சேவை கட்டணத்தை பல்வேறு இனங்களில் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நாளை நடக்கும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் பிரதானமாக இடம் பெறவுள்ளது. குடியிருப்பு, தொழிற்சாலை, வணிகம், கல்வி நிறுவனம் என பல்வேறு வகைகளில் மாதாந்திர சேவை கட்டணம் விதிக்கப்படவுள்ளது. குடியிருப்புகளுக்கு சதுர அடிக்கு ஏற்ப சேவை கட்டணம் விதிக்கப்படும். 500 சதுர அடி பரப்பளவில் வீடு இருந்தால் அந்த வீட்டிற்கான பாதாள சாக்கடை சேவை கட்டணம் 30 ரூபாய். பரப்பளவிற்கு ஏற்ப சேவை கட்டணம் உயரும். 4 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் வீடு இருந்தால் சேவை கட்டணமாக 200 ரூபாய் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
வணிக இணைப்புக்கு 75 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரையிலும், தொழிற்சாலைகளுக்கு 75 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், மருத்துவமனைகளுக்கு 100 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும் (படுக்கை வசதிக்கு ஏற்ப) , தங்கும் விடுதிகளில் 160 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், மூன்று நட்சத்திர ஓட்டல்களுக்கு 2500 ரூபாய் வரையிலும், சினிமா தியேட்டர்களில் 350 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், திருமண மண்டபத்திற்கு 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும், பள்ளி, கல்லூரிகளில் 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரையிலும், கட்டண கழிப்பிடங்களில் 500 ரூபாய் வரையிலும் சேவை கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 ஆண்டிற்கு ஒரு முறை கட்டணத்தை உயர்த்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்ற கூட்டத்தில் விவாதத்திற்கு பின்னர் மாதாந்திர சேவை கட்டண முறையில் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மாநகராட்சியில் 377.17 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடக்கிறது. உக்கடத்தில் 52 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடு, வணிகம், தொழில், தங்கும் விடுதி உள்ளிட்ட இனங்களுக்கு மாதாந்திர சேவை கட்டணம் பெரும் சுமையாக இருக்கும். குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சாக்கடை இணைப்பிற்கு தொகை செலவிடவேண்டும். எனவே மாதாந்திர சேவை கட்டண நடைமுறை கூடாது என கம்யூ., கவுன்சிலர்கள் உட்பட பல்வேறு கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சாக்கடை இணைப்பிற்கு டெபாசிட் பெறப்படுகிறது. அதற்கு மேலும் மாதாந்திர சேவை கட்டணம் எதற்கு, ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தொகை கிடைக்கும், என்ன சேவை செய்ய போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகத்தினர், “சாக்கடை நீரை சுத்திகரிக்கவேண்டும். அதற்கு அதிக தொகை செலவாகும். சாக்கடை இணைப்பு பராமரிக்கவேண்டும். எனவே மாதாந்திர சேவை கட்டணம் தேவை, ” தெரிவித்துள்ளனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற பல்வேறு கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு காட்டவுள்ளனர்.