தினமலர் 01.03.2010
பாதாள சாக்கடை திட்டம்‘ எப்போது நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். அருப்புக்கோட்டை நகராட்சியில் அவசர கூட்டம் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் தலைமையில் நடந்தது. கமிஷனர் ரேவதி, இன்ஜினியர் கருணாகரன், ஏ.இ. குணசீலன், நகரமைப்பு அலுவலர் வாகினி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
சிக்கந்தர்: அஜிஸ் நகர் பார்க்கில் உள்ள மேல்நிலை தொட்டியில் குடிநீர் நிறைந்து வீணாகிறது. பணியாளர்கள் நியமனம் செய்யுங்கள்.
தலைவர்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமமூர்த்தி: நகராட்சி குப்பை தொட்டிகள் சேதமடைந்துள்ளது. புதியதாக வாங்குவதற்கு பதிலாக சேதமடைந்த குப்பை தொட்டிகளை சரி செய்து பயன்படுத்தினால் நகராட்சியின் செலவினத்தை குறைக்கலாம்.
தலைவர்: சேதமடைந்த தொட்டிகள் சரி செய்யப்படும்.
சிவசங்கரன்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து பல மாதங்கள் ஆகி விட்டது. திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்.
தலைவர்: அதற்கான வேலைகள் விரைவில் நடைபெறும்.
தலைவர்: வார்டுகளில் உள்ள அடிப் படை பிரச்னைகளை மனு கொடுக்கும் படி கவுன்சிலர்களிடம் கூறப்பட்டது. ஒருசில கவுன்சிலர்களை தவிர மற்றவர்கள் எழுதி தரவில்லை. பின் எப்படி பிரச்னைகளை தீர்ப்பது?
திருமாவளவன்: வார்டுகளில் என்ன வேலை தான் நடக்கிறது? தங்கள் கவனத்திற்கு கொண்டு வர. எந்த வேலைகளும் ஒழுங்காக நடப்பதில்லை. சுகாதார துறை முற்றிலும் செயல்படவில்லை.
அமிர்தகொடி: வார்டுகளில் துப்புரவு பணி செய்து முடித்தவுடன் அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் துப்புரவு பணியாளர்களை கையெழுத்து வாங்க சொல்லுங்கள்.
தலைவர்: அவ்வாறு செய்வோம்.
அண்ணாமலை: கோடை காலம் தொடங்கி விட்டது. நகரில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறது. உடன் சரி செய்ய வேண்டும்.
கண்ணன்: மலையரசன் கோயில் ரோடு – சாலியர் மேல்நிலை பள்ளி வரை புதிய ரோடு போட ஏற்பாடு செய்யுங்கள்.
தலைவர்: ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.