தினமலர் 30.03.2010
பாதாள சாக்கடை திட்ட சர்வே பணி துவக்கம்
சேலம்: சேலம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான பூர்வாங்க பணி துவங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 2006ல் 149 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அடிக்கல் நாட்டப்பட்டது. டெண்டர் எடுக்க விண்ணப்பம் செய்தவர்கள் கூடுதல் மதிப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்தனர். மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் விட்டதில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் ஐந்தாவது முறையாக நடந்த பாதாள சாக்கடை திட்டத்துக்கான டெண்டரை சென்னை நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் அலுவலகம் மூலம் ரத்து செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்துக்கான டெண்டர் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக விடப்பட்டது. பேக்கேஜ் ஒன்று, இரண்டு, மூன்று என கட்டங்களாக பிரித்து டெண்டர் விடப்பட்டது.
ஹைதராபாத்தை சேர்ந்த ‘பிஎஸ்சிபிபிஐஎல்‘ என்ற நிறுவனம் பேக்கேஜ் ஒன்று, மூன்று ஆகியவற்றை டெண்டர் எடுத்துள்ளது. பேக்கேஜ் ஒன்று அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் பணியும், பேக்கேஜ் மூன்று அஸ்தம்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி அமைக்கப்படும். பேக்கேஜ் இரண்டு கொண்டலாம்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவேற்றப்படும். தற்போது, பேக்கேஜ் ஒன்று மற்றும் மூன்று பகுதிகளில் திட்டத்தை நிறைவேற்ற பூர்வாங்க பணியில் ஹைதராபாத் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சேலம் நான்கு ரோடு குழந்தைகள் ஏசு பேராலயம் முன்புள்ள ரோட்டில் நேற்று பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான சர்வேயில் ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வீடாக சென்று சாக்கடை, சாலை நிலமட்டம், எத்தனை அடி ஆழத்தில் குழி வெட்ட வேண்டும், மெயின் சாலையில் இணைக்கும் குறுக்கு சந்துகள், சாலை மட்டமும், வீதிகள், வீடுகளின் மட்டம், சாக்கடை இணையும் இடங்கள், சாலைகளில் இருந்து சாக்கடை அமைந்துள்ள நில மட்டம், அதன் ஆழம், அகலம் உள்ளிட்ட நில அளவை பணியை பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்து, கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை அமைப்பதற்கான பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில் திட்டம் நிறைவேற வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பல நாள் கனவு திட்டமான பாதாள சாக்கடை திட்டப்பணிக்கான வேலை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.