தினமலர் 10.06.2010
பாதாள சாக்கடை திட்ட பணிக்கு மக்களின் பங்கை வசூலிக்க முடிவு
தேனி: பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களின் பங்களிப்பாக 13.29 கோடி ரூபாய் திரட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கமிஷனர் மோனி கூறியதாவது; நகராட்சியில் 38.61 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்ட காலதாமதத்தால் திட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கருவேல்நாயக்கன்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பங்களாமேட்டில் ஒரு நீரேற்றும் நிலையம், கே.ஆர்.ஆர்., நகர், கருவேல் நாயக்கன்பட்டியில் தலா ஒரு நீருந்து நிலையம், கருவேல்நாயக்கன்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் வடிகால்வாரியம் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் மே 25 ல் திட்டத்திற்கான டெண்டர் முடிந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக பொதுமக்களின் பங்களிப்பாக 13.29 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி செலுத்துவோர், குடிநீர் இணைப்பு பெறுவோர், வீட்டு உரிமை பெயர் மாற்றம், கட்டட அனுமதி கேட்டு வருவோரிடம் இதற்கான தொகை வசூலிக்கப்படும். மற்றவர்களிடம் எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.