தினகரன் 18.11.2010
பாதாள சாக்கடை பணி ஜனவரியில் நிறைவடையும் திருவாரூர் நகராட்சி ஆணையர் தகவல்
திருவாரூர், நவ.18: திருவாரூரில் பாதாளசாக்கடை பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் நிறைவுபெறும் என்று நகராட்சி ஆணையர் சரவணன் கூறினார்.
திருவாரூர் வர்த்தக சங்க கூட்டம் நேற்றுமுன்தினம் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சேகர் வரவேற்றார். திருவாரூரில் பாதாள சாக் கடை பணிகளை கடைவீதிகளில் வியாபாரம் பாதிக்காதவகையில் விரைவில் பணியை முடிக்க வேண்டும். வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.
நகராட்சி ஆணையர் சரவணன் பேசுகையில், பாதாள சாக்கடை திட்டப் பணி முக்கிய பிரமுகர்கள் வருகை, மழை போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளது. 63 கி.மீட்டரில் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் 4 கி.மீ பாக்கி உள்ளது. பணி நிறைவுபெற்ற இடங்களில் சாலை போட ஏற்கனவே ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு சாலைகள் திட்டம் மூலம் 11கி.மீ சிமென்ட் சாலை அமைக்க ரூ5.50கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10கி.மீ. சாலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவுபெறும் என்றார். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தன் பேசினார்