பார்க்கிங்’ வசதியுடன் பூ மார்க்கெட்
திருப்பூர் :””திருப்பூர் பூ மார்க்கெட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், “பார்க்கிங்’ வசதியுடன் புதிதாக பூ மார்க்கெட் வளாகம் அமைக்கப்படும்,” என மேயர் விசாலாட்சி தெரிவித்தார்.திருப்பூர் 45வது வார்டு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில், தினமும் இரண்டு டன்னுக்கும் அதிகமான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். அங்குள்ள கட்டடங்கள் மிகவும் பழுதடைந்துள்ளதால், சிறிய மழை பெய்தாலும், கால்வைக்க முடியாத அளவுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
மேலும், பூ மார்க்கெட் முன்புறம் வாகனங்களை இஷ்டம்போல் நிறுத்துவதாலும், “பிளாட்பார்ம்’ மற்றும் தள்ளுவண்டி கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதுதொடர்பாக, கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான “தினமலர்’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், “பார்க்கிங்’ வசதியுடன் பூ மார்க்கெட் வளாகத்தை புதுப்பிக்க வேண்டுமென வியாபாரிகள் மேயரிடம் முறையிட்டனர். மேயர் விசாலாட்சி, கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், மார்க்கெட் பகுதியை நேற்று பார்வையிட்டனர். மேயர் கூறியதாவது:
பூ மார்க்கெட்டை சீரமைக்க வேண்டுமென வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் பகுதிகளை சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், அனுமதியும், மானியமும் கிடைக்கப்பெற்று, பணிகள் துவங்கப்பட உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்தும், பூ மார்க்கெட் பின்புறம் உள்ள அறிவொளி ரோடு பயன்பாட்டில் இல்லை. முதல்கட்டமாக, பூ மார்க்கெட்டில் இருந்து அறிவொளி ரோட்டுக்கு வழித்தடம் ஏற்படுத்தப்படும்.
முன்பகுதியில் உள்ள தள்ளுவண்டிகள், “பிளாட்பார்ம்’ கடைகள் அறிவொளி ரோட்டுக்கு மாற்றப்படும். இதனால், போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் இருக்கும். இரண்டு நுழைவாயில் இருந்தால், நெரிசல் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தரைத்தளத்தில் டூவீலர் பார்க்கிங் வசதி, முதல் தளத்தில் பூக்கடைகள் செயல்படும் வகையில், வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதனால், வாகன நெரிசல் ஏற்படாது. வியாபாரிகளும் இடையூறு இல்லாமல், கடைகளுக்கு சென்றுவருவர், என்றார்.