பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் வரிவசூல் வாகனம் செல்லும் இடங்கள்
திருநெல்வேலி : பாளை., மேலப்பாளையம் பகுதிகளில் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் வரியினங்களை செலுத்தலாம் என கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகராட்சிக்கு செலுத்தப்படவேண்டிய சொத்துவரியினை ஒவ்வொரு அரையாண்டும், வரிவிதிப்பாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டும். சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி, பாதாள சாக்கடை சேவைக் கட்டணம் போன்ற வரியினங்கள் வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை (25ம் தேதி), 26ம் தேதிகளில் மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி இனங்களை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தலாம். நடமாடும் வரிவசூல் வாகனம் வி.எம்.சத்திரம், மகாராஜநகர், பகுதிகளுக்கு 25ம் தேதியும், திருமால்நகர், தியாகராஜநகர் பகுதிகளுக்கு 26ம் தேதியும் வரும். பொதுமக்கள் தங்களுடைய வரி மற்றும் நிலுவை வரிகளை நெல்லை மாநகராட்சியின் நடமாடும் வரிவசூல் வாகனத்தில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்க்கலாம். இவ்வாறு கமிஷனர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.