தினமலர் 05.05.2010
பிறந்தகுழந்தை முதல் வயதான முதியவர் வரை ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும்
தூத்துக்குடி : மக்கள் தொகை கணக்கெடுப்பில் பிறந்த குழந்தை முதல் வயதான முதியோர் வரை ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுக்க வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை கணக்கெடுப்பு அதிகாரி தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஒட்டி பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கணக்கெடுப்பு சம்பந்தமாக முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி மாநகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் நடந்தது.மாநகராட்சி முதன்மை கணக்கெடுப்பு அதிகாரி மற்றும் கமிஷனர் குபேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் வரவேற்றுப் பேசினார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்கள் நகரமைப்பு அதிகாரிகள் ராமச்சந்திரன், ஆறுமுகம், நாகராஜன், மாஸ்டர் டிரைனர் ஜெயக்குமார், சந்திரமோகன், முருகேசன் ஆகியோர் கணக்கெடுப்பு பணிகள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கினர். கணக்கெடுப்பு பணி எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வீடியோ படக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டன.பயிற்சிக்கு தலைமை வகித்த மாநகராட்சி கமிஷனர் குபேந்திரன் பேசியதாவது;மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி என்பது மிகவும் முக்கியமான பணியாகும். இந்த பணியினை மேற்கொள்பவர்கள் சிறப்பாக பணி செய்ய வேண்டும். முழு மனதுடன் பணியினை மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிய வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை ஒரு வீடு கூட விடுபடாத அளவிற்கு கணக்கெடுக்க வேண்டும். வீடுகளில் கணக்கெடுக்கும் போது அந்த வீட்டின் நிலையை முழுமையாக கணக்கெடுப்பு படிவத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.வீட்டின் தரை எப்படி உள்ளது, வீடு சுண்ணாம்பு கல்லில் கட்டப்பட்டதா, செங்கலில் கட்டப்பட்டதா, வீட்டில் என்ன வாகனம் உள்ளது, குடிநீர் இணைப்பு உள்ளதா, மின் விசிறி, மிக்ஸி உள்ளிட்ட என்ன பொருட்கள் எல்லாம் உள்ளது என்பதை முழுமையாக வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுத வேண்டும்.
வீட்டில் குழந்தைகள், முதியோர்கள் இருந்தால் அவர்கள் ஒருவர் கூட விடுபடாமல் கணக்கெடுத்து விட வேண்டும்.கணக்கெடுப்பில் என்ன, என்ன கேட்கப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். வீட்டு உரிமையாளரிடம் நல்ல முறையில் பேசி அவர்களிடம் அனைத்து தகவல்களையும் பெற வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த கணக்கெடுப்பு முழுமையாக துல்லியமாக இருந்தது என்கிற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல் நல்ல முறையில் பணி செய்ய வேண்டும்.இவ்வாறு குபேந்திரன் தெரிவித்தார்.