தினமலர் 22.03.2010
‘பிறப்பு, இறப்பு பதிவில் இரண்டாமிடம்‘
அவிநாசி : ”பிறப்பு, இறப்பு பதிவில் தமிழகம் இரண்டாமிடம் வகிக்கிறது,” என்று சுகாதாரத்துறை உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார். பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான சிறப்பு முகாம், அவிநாசி குலாலர் திருமண மண்டபத்தில் நடந்தது; தாசில்தார் சென்னியப்பன் தலைமை வகித்தார்.
மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர் (பிறப்பு– இறப்பு) தேவி பேசியதாவது: கேரளாவில் 100 சதவீத பிறப்பு, 97 சதவீத இறப்பு பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 100 சதவீத பிறப்பு, 91 சதவீத இறப்பு பதிவு செய்யப்பட்டு, இரண்டாமிடத்தில் உள்ளது. திருப்பூர் மாவட்டம் 100 சதவீத பிறப்பு, 97.5 சதவீத இறப்புகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. விபத்துகளில் சிக்கி இறப்பவர்கள் பெயர் பதிவு செய்யப்படுவதில்லை. இதுகுறித்து, எஸ்.பி., கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்யும் இறப்புகளை பதிவு செய்ய ‘பாரம் – 2′ விரைவில் வழங்கப்படும்.
பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம், ஏப்., மற்றும் மே மாதத்தில் நடக்கிறது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம். பிறப்பு, இறப்பை பதிவு செய்யும் கிராம நிர்வாக அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்; ஏதாவது பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு சிக்கல் ஏற்படும், என்றார்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூபதிராஜன், உணவு ஆய்வாளர் துரைராஜ், வருவாய் ஆய்வாளர்கள் பழனிசாமி (சேவூர்), சாந்தி (அவிநாசி), ஆறுமுகம் (பெருமாநல்லூர்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றன.