தினமணி 19.03.2010
பிறப்பு – இறப்பு பதிவு பயிற்சி முகாம்
உடுமலை, மார்ச் 18: சுகாதாரத் துறை அலுவலர்களுக்கான பிறப்பு மற்றும் இறப்பு பயிற்சி முகாம் உடுமலையில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
உடுமலை, எஸ்கேபி மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டாட்சியர் ஆ.கணபதி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் கே.புஷ்பராஜ் முன்னிலை வகித்தார்.
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
கொலை மற்றும் விபத்து காரணமாக நடைபெறும் இறப்புகளை சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவாளர்களிடம் பதிவு செய்ய வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தமிழக அரசின் ஆணைக்கேற்ப வருகிற ஏப்ரல், மே மாதங்களில் 2005-ம் ஆண்டில் இருந்து இது நாள் வரை பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலேயே குழந்தைகள் பெயரையும் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட பிறப்பு– இறப்பு உதவி இயக்குனர் பி.தேவி 100 சதவிகித பதிவின் முக்கியத்துவம் குறித்து அலுவலர்களுக்கு விளக்கிக் கூறினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மகாராசன் நன்றி கூறினர்