தினகரன் 14.10.2010
பில் தொகை வழங்க உறுதி மாநகராட்சி ஒப்பந்ததாரர் போராட்டம் வாபஸ்
பெங்களூர், அக். 14: பெங்களூர் மாநகராட்சி ஒப்பந்த தாரர்களுக்கு பாக்கியுள்ள தொகையில் ரூ.230 கோடி வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக நடத்திய தர்ணா போராட்டம் வாபஸ் பெற்றனர்.
மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கியுள்ள பில்லை செட்டில் செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தற்கு தலைமை ஏற்று சங்க தலைவர் ஆர்.ஜெ.சீனிவாஸ் பேசியதாவது:
மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் ஆட்சி நடந்த காலம் முதல் தற்போது வரை குறைந்தது 4 ஆண்டுகளாக வார்டுகளில் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முடித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு வர வேண்டிய பாக்கி பணம் இன்னும் வழங்கவில்லை. இதை வழங்கும்படி பலமுறை ஆணையரிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி பணியை கையில் எடுத்த நாங்கள் பொருட்கள் வாங்கியது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கல் போன்றவைக்கு தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளோம். வட்டி கொடுக்க முடியாமலும், கடனை திருப்பி செலுத்த முடியாமலும் கஷ்டப்படுகிறோம்.
நவராத்திரி விழா தொடங்கி வரும் சனிக்கிழமை அனைத்து பிரிவு தொழிலாளர்களும் ஆயுதா பூஜை போடுகிறார்கள். அப்போது எங்களின் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணத்தை வழங்க வேண்டும். ஆகவே அதற்குள் மாநகராட்சி சார்பில் நிலுவையில் உள்ள பில் அனைத்தும் செட்டில் செய்ய வேண்டும். இல்லையெனில் தற்போது கையில் எடுத்துள்ள வளர்ச்சி திட்டங்களை முடக்குவதுடன், எதிர்க்காலத்திலும் எந்த திட்டமும் செயல்படுத்த வாய்ப்பு கொடுக்க மாட்டோம் என்று எச்சரித்தனர். இதனிடையில் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த இணை ஆணையர் நிரஞ்சன், உடனடியாக ரூ.230 கோடி வழங்குகிறோம். மீதி பாக்கியை அடுத்த வாரம் செட்டில் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டம் கைவிட்டனர்.