தினகரன் 30.06.2010
பிளாஸ்டிக் ஒழிப்பை தொடர்ந்து குமரியை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம்
நாகர்கோவில், ஜூன் 30: குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டத்திற்காக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நகராட்சி கவுன்சிலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
குமரி மாவட்டத்தில் பிளா ஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து குப்பை கள் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கலெக் டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார். நாகர்கோவில் நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன், துணை சேர்மன் சைமன்ராஜ், ஆணையர் ஜானகி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராமன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை நகர பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக நகராட்சி சேர்மன், கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்த கலெக்டர் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.
பின்னர் நகராட்சியில் வார்டு பகுதிகளை மேலும் மேம்படுத்த வேண்டி கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது துணை சேர்மன் சைமன்ராஜ், ‘சைமன்நகர் பகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்த வேண்டும். வார்டுக்கு உட் பட்ட ஆசாரிபள்ளம் ரோடு என்ற முகவரியின் கீழ் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வருகின்றன. இவற்றை அந்தந்த பகுதி தெருக்களின் பெயர்களில் தனித்தனியாக பிரிக்க வேண்டும்’ என்றார்.
குறைகளை கேட்டறிந்த கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சில இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு காரணமாகவும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வயல்வெளிகள், குளங்கள், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்யப்பட்டு மீறுவோருக்கு ரூ.100, ரூ.1000 என்று ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பிற மாநிலங்கள், மாவட்டங்களில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் இடங்களில் கவுன்சிலர்களை அழைத்து சென்று காண்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடைகளில் இருந்து குப்பைகளை கால்வாய்களில் கொட்டுகின்றனர். இதனால் சாக்கடை தேங்கி நோய்கள் பரவுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு போன்று குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற கவுன்சிலர், பொதுமக்களுக்கு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘10க்கு எட்டரை லிட்டர்தான் இருக்கிறது’
கவுன்சிலர் சேகர், ‘கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ரேஷன்கடையில் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் எட்டரை லிட்டர்தான் இருக்கிறது. 20 கிலோ அரிசிக்கு 18 கிலோதான் தருகின்றனர். கேட்டால் மூடை சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர்’ என்றார். கவுன்சிலர் சைலஜா, ‘9 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வடசேரி அரசு உயர்நிலை பள்ளியில் (மலையாளம்) உள்ள பயன்படாத கட்டடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அரசு இந்த கட்டடங்களை தையல் பயிற்சி பள்ளி உள்ளிட்ட வேறு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். நகராட்சி மருத்துவமனையில் பிரசவ வார்டு வசதியை ஏற்படுத்த வேண்டும்’ என்றார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.